Follow me on Twitter RSS FEED

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலி சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி அதிரடி மாற்றம்

Posted in


சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பினர் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது நாட்டில் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்து வருகிறது. 

ஆனால் தூதரகம் தாக்கப்பட்டதில்லை. ஆனால் அமைதியான நகரம் என்று பெயரெடுத்த சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரிடம் தனது கண்டனத்தை அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசும், தமிழக அரசுக்கு தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. தொடர் போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது.

அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடத்த அனுமதி அளித்த தும், அங்கு துணை கமிஷனர் புகழேந்தி தலைமையில் குறைந்த போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததுதான், தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உயர் போலீஸ் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்தில் இல்லை. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தாக்குதலுக்கு பின்னரே உயர் அதிகாரிகள் அங்கு வந்தனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். அவர் சிறைத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக உள்ள எஸ்.கே.டோக்ரா, லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாகவும், அந்தப் பதவியில் இருந்த டி.கே.ராஜேந்திரன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜார்ஜ், சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. புதிய கமிஷனராக ஜார்ஜ் இன்று காலை பதவி ஏற்கிறார்.

0 comments: