Follow me on Twitter RSS FEED

முடிவு செய்யும் முக்கிய இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ்

Posted in

எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் ‘தொங்கு சபை’ எந்தவிதத்தில் முடிந்துள்ளது. என்றாலும், மேலும் எதிர்பார்த்தபடியே அந்த பிராந்தியத்தில் அடுத்து யார் அரசு அமைக்க வேண்டும், யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று உள்ளது.
நடந்து முடிந்துள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில், இரண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதுவும் கூட எதிர்பார்த்த ஒன்றே. அதே சமயம் கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளும் அதன் காரணமாக அதிக இடங்களையும் பெறும் என்ற எதிர்பார்க்க முடியாத எதிர்பார்ப்புகளும் இருக்கத் தான் செய்தன. தேர்தல் முடிவுகள் அந்த எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளன.
அந்த விதத்தில், கிழக்கு மாகாணத்திலும் மத்தியில் ஆளும் கூட்டணியே அதிக இடங்களை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை வைத்து நோக்கும் போது, தமிழ் கூட்டமைப்பு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிபை விட ஒரே ஒரு இடம் தான் குறைவு. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் கூட்டமைப்பிற்கு பதினொன்றும், ஆளும் கூட்டணிக்கு பன்னிரெண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால் மாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்ற கட்சி என்ற விதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியே முன்னிற்கிறது. அதன் காரணமாக இரண்டு ‘போனஸ்’ இடங்கள் அந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளன. ஆக, கூட்டணியின் மொத்த இடங்கள் பதினான்காக உயர்ந்துள்ளது.
ஆனால், மாகாணத்தில் ஆட்சி அமைக்க இத்தனை இடங்கள் போதாது. மொத்தமுள்ள முப்பதியேழு இடங்களில் பாதிக்கும் அதிகமான பத்தொன்பது இடங்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியம். அதே சமயம், மாகாண சபை சபாநாயகர் பதவியும் தன் வசமே இருக்க வேண்டும் என்று எந்தவொரு ஆளும் கட்சியும் கருதுவது இயற்கை. சபாநாயகர் பதவியும் வேண்டும், அதே சமயம் சபை வாக்களிப்புகளில் ஒவ்வொரு முறையும் சபாநாயகரின் ‘விருப்ப வாக்கை’ நம்பி மட்டுமே அரசு செயல்படக் கூடாது என்று கட்சி தலைமைகள் எண்ணுவதும் இயற்கை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், கிழக்கு மாகாணத்தில் நிலையான ஆட்சி அமைக்க இருபது இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த கணக்கை வைத்துப் பார்க்கும் போது, அரசு மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் இருவருக்குமே போதிய அளவில் உறுப்பினர்கள் இல்லை என்பதே உண்மை. இந்த பின்னணியில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி – கிழக்கு மாகாணத்தில் பெற்றுள்ள நான்கு இடங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அதுபோன்றே அரசில் பங்கு வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்தை பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் – விமல் வீரவன்சவின் கட்சியானது அரசு கூட்டணியையுமே ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். அவ்வாறானால், இரு தரப்பினருமே தலா பதினைந்து இடங்களை பெற்றவர்களாவார்கள்.
இந்த பின்னணியில், இரு தரப்பினருக்குமே மேலும் நான்கு இடங்களையாவது பெற்றால் மட்டுமே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு பின்னாலான அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கிறது. மேலே கூறியது போல் இரண்டு அணிகள் உருவாகும் பட்சத்தில், தலா பதினைந்து இடங்கள் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு இடங்கள் முஸ்லிம் காங்கிரஸ் வசம் உள்ளது. சாதாரண நிலையில் அந்த கட்சியின் ஆதரவுள்ள அணியே கிழக்கு மாகாணத்தில் அரசு அமைக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவாகி உள்ளது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அரசு சார்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், முஸ்லிம் காங்கிரஸுடன் அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரத்தின் போதே, முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து அரசு அமைக்க கூட்டமைப்பு முயலும் என்று சம்பந்தன் வெளிப்படையாகவே பேசிவந்துள்ளார். தேர்தலுக்கு பின்னர், சுட்டமைப்பு ஆட்சியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அது கூட்டணி அரசாகவே இருக்கும் என்பதில் கூட்டமைப்பு தெளிவாக இருந்தது. அந்த அரசுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் இடம் பெற்றால் மட்டுமே மாகாண சபையில் கூட்டமைப்பிற்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் சம்பந்தன் தலைமை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த பின்னணியில், மத்தியில் ஆட்சியில் பங்கு பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸை எவ்வாறு எதிர் அணிக்கு இழுக்க வேண்டும் என்பது குறித்த சர்ச்சைகள் தமிழ் கூட்டமைப்பு தலைமைக்குள் எழுந்தமை குறித்து பத்திரிகை செய்திகள் முன்பே கூறி வந்துள்ளன. அதில் ஒன்று தான், கூட்டணி ஆட்சியில் முதல்வர் பதவியை கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் தலா இரண்டரை ஆண்டுகள் தங்களதாக்கிக் கொள்வது. இது குறித்து இரு கட்சிகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தேர்தலுக்கு முன்பு செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பின்னணியில் தான், தேர்தல் முடிவுகள் வெளிவந்த கையுடன் சம்பந்தன், இத்தகைய கூட்டணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்ப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளார். இத்தகைய கருத்து அமைந்த கடிதத்தையும் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் மாவை சேனாதிராஜா கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு, இரண்டரை ஆண்டு விகிதாசாரத்தில் விடுக்கப்பட்ட அழைப்பா அல்லது, அடுத்த ஐந்து ஆண்டுகளுமே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு கூட்டமைப்பு அளிக்கும் உத்தரவாதமா என்பது தெரியவில்லை. முக்கியமாக, இவ்வாறு பத்திரிகை செய்தி மூலம் எதிர்கால கூட்டணி கட்சிகள் என்று கூட்டமைப்பு கருதும் கட்சிகளுக்கு விடுத்துள்ள அழைப்பு அந்தந்த கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசித்தே விடப்பட்டதா என்றும் தெரியவில்லை.
அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் கூட்டமைப்பு ஒரு தலைப்பட்சமாக முடிவு தெரிவித்து இருந்தால், அத்தகைய அழைப்பு, அந்தந்த கட்சி தலைமைகளை ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாக்குவதற்காக கூட்டமைப்பு விரித்த அரசியல் வலை என்ற எண்ணம் உருவாகும். அதுவே, பின்னர் கூட்டமைப்பு பங்கு பெறும் அரசு அமைவதற்கு தடைக்கல்லாக அமையும். அல்லது, அத்தகைய அரசு அமையும் பட்சத்தில், பிற்காலத்தில் கூட்டமைப்பு குறித்த நம்பகத் தன்மையின்மையை அந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே உருவாக்கும். இது கூட்டமைப்பின் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல.
அதை விட முக்கியமாக, இப்போதும், எப்போதும் கூட்டமைப்பின் இத்தகைய ‘வெளிப்படையான’ அரசியல் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளேயே அனாவசிய சலசலப்புகளை ஏற்படுத்தி, உட்கட்சி பூசல்களுக்கு வழிவகுக்கும். அதற்குண்டான பழியும் பாவமும் முதல் முறையாக மத்தியில் ஆளும் இரண்டு முக்கிய சிங்களவர் கட்சிகளுக்கு அப்பால் சென்று, கூட்டமைப்பின் தலையில் விழும். அதற்கு கூட்டமைப்பு தலைமை தயாரா? என்று ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதுபோன்றே, தங்களது தற்போதைய அரசியல் முயற்சி வெற்றிபெறவில்லை என்றால், அது குறித்து தமிழ் மக்களிடையே எத்தகைய எண்ணங்கள் உருவாகும் என்பதையும் கூட்டமைப்பு கருத்தில்கொள்ள வேண்டும்.
அதே சமயம், இத்தகைய கூட்டணி ஒன்று உருவாகி செயல்படும் பட்சத்தில், அதன் பிரதிபலிப்பு தேசிய அளவில் தோன்றவும் செய்யும். அவ்வாறானால், மத்தியில் புதிய கூட்டணி ஒன்று உருவாவதற்கு அந்த கூட்டணி அச்சாரம் போடும். அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிற்குள்ளும் நாடாளுமன்றத்திலும் பிரதிபலிக்க தொடங்கும். அதுவே, அடுத்த தேர்தல் சமயத்தில் ஆட்சிமாற்றத்திற்கு அடிகோலும் என்று எதிர்பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், வடமத்தி மற்றும் சப்ரகமுவ ஆகிய இரு மாகாண சபை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அத்தகைய எண்ணம் உருவாக உடனடி காரணம் இல்லை. ஆனால் அதுவே உந்துவிசையாக உருவாகாது என்று கூறிவிடவும் முடியாது.
ஆனால், கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நடவடிக்கை அறிவிக்கும் செய்தி என்ன? ஒன்று, எப்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை எந்தவித கோரிக்கைகளும் இல்லாமல் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறதோ, கிழக்கு – வடக்கு இணைப்பு போன்ற மிகவும் சிக்கலான பிரச்சினைகளிலும் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளையும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவுகளையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டதாகவே கருத வேண்டும். அவ்வாறாகும் பட்சத்தில், நாளை கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப ஓர் அரசு கிழக்கு மாகாணத்தில் ஏற்படவில்லை என்றாலும், இரு மாகாண இணைப்பு பிரச்சினையை அந்த கட்சி மீண்டும் முன்னெடுத்து அரசியல் செய்வதற்கான தார்மீக உரிமையை இப்போதே இழந்து விட்டது.
அதுபோன்றே, கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப, கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் இதுபோன்ற ஓர் அரசியல் மற்றும் தேர்தல் அமைப்பிற்கு அந்த கட்சி தயாராக வேண்டும். எப்போது, வடக்கில் மகாணசபை தேர்தல் நடக்கிறதோ, அப்போது, தேர்தலில் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு என்பன போன்ற கோரிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸும், ஏன் ஐக்கிய தேசிய கட்சியும் கூட முன் வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு மாகாணத்தில் தனது அரசியல் வலிமை மற்றும் உட்கட்சி நிர்பந்தங்கள் ஆகிய காரணங்களுக்காக, கூட்டமைப்பு அத்தகைய ஒப்பந்தத்திற்கு தயாராக இல்லாத பட்சத்தில், கிழக்கு மாகாண அரசு கவிழும் நிலைமை உருவாகலாம். அதற்கும் கூட்டமைப்பு தயாராக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு மேலும் ஒரு தார்மீக சங்கடத்தை கூட்டமைப்பிற்கு ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆளுமைக்கு பணிந்து கூட்டமைப்பு அரசியல் செய்து வந்ததன் காரணமாக, அரசு இயந்திரங்களுடன் இணைந்து செயல்படும் விதத்தையும் வித்தையையும் அந்த கட்சி அறிந்திருக்கவில்லை. அந்த விதத்தில், ஏதோ ஒரு விதத்தில் கிழக்கு மாகாண அரசில் கூட்டமைப்பு இடம் பெறுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் முஸ்லிம் (காங்கிரஸ்) தலைமையிலான அரசில் கூட்டமைப்பு பங்கு பெறுமானால், அதுவே, கூட்டமைப்பின் மகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் – மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் பங்கு வகித்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்களின் ஆட்சி அனுபவத்தில் இருந்து நல்ல படிப்பினை பெற வழிவகுக்கும்.
அதே சமயம், எப்போது வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற ‘அடிப்படை விடயங்களில்’ கூட்டமைப்பு விட்டுக் கொடுக்க தயாராகி விட்டதோ, அப்போதே அந்த கட்சி பிற அரசியல் கட்சிகளை போலவே சிந்தித்து செயலாற்ற தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கி விட்டது என்றே கருத வேண்டும். இதுவும் ஒருவிதத்தில் வரவேற்கப்பட வேண்டிய விடயமே. அதே சமயம், எப்போது கொள்கைசாரா அரசியலுக்கு கூட்டமைப்பு தன்னை தயார்படுத்திக் கொண்டு விட்டதோ, அப்போதே அதனால் ஏற்படும் அதிர்வுகளுக்கும் அதிர்ச்சிகளுக்கும் கூட அதன் தலைமை கட்சியை தயார் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு, கூட்டமைப்பை விட நேரடி அரசியலில் அனுவமும் அது பான்றே எதிர்பார்ப்புகளும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் வேறுவிதமாக சிந்திக்கலாம். மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் கூட்டணியும் தனது பங்கிற்கு முதலமைச்சர் பதவி உட்பட்ட பிற அரசியல் சலுகைகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மற்றும் அந்த சமுதாயத்தினருக்கு அள்ளி அளிக்கலாம். இந்தவிதத்தில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் தொடரும் பட்சத்தில், கிழக்கு மாகாண ஆட்சியில் பங்கு என்பதுடன் மத்தியில் அமைச்சரவை பதவிகளையும் அந்த கட்சி தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இவ்வாறாக முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்தால், அதற்காக கூட்டமைப்பு – மத்திய அரசு தலைமை உள்ளிட்ட யாரையும் குறை கூறி அரசியலாக்கக் கூடாது. அதில் அனாவசியமாக இனப் பிரச்சினையின் அலகுகளை கண்டு, கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு தமிழ் மக்களின் எண்ணவோட்டத்தை தவறான பாதையில் வழி நடத்த முயலக் கூடாது. நடிகர் கவுண்டமணியின் வார்த்தையில் கூற வேண்டும் என்றால், ‘அரசியலில் இதுவெல்லாம் சகஜம்’ என்ற விதத்தில் அதனை ஏற்றுக்கொண்டு எதிர்கால தேர்தல் அரசியலுக்கு தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதுவே, கூட்டமைப்பும் தமிழ் சமுதாயமும் தங்களை இனப் போர் அற்ற எதிர்கால அரசியலுக்கு தங்களை தயார் செய்துகொள்ள உதவும். அதுவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கும் வழிவகை செய்யும். மாறாக, ‘எதிர்மறை அரசியல்’, தமிழ் சமுதாயத்திற்கு எதிர்மறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். இதுவே கடந்த காலம் அறிவித்துணர்த்தும் பால பாடம். அதுவே தமிழ் சமுதாயத்திற்கு தற்போது முதியோர் கல்வியும் கூட என்று மாறிவிட்டதற்கு தமிழ் அரசியல் மற்றும் போராளிக் குழுக்களின் தலைமைகள் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய நிலைமை மாறுவதற்கு தற்போதாவது ஆவன செய்ய வேண்டும்!
Courtesy: Tamilmirror

0 comments: