Follow me on Twitter RSS FEED

SLMC பற்றி விமர்சிக்க ஆசாத் சாலிக்கு அருகதை கிடையாது-ஏ.எம்.ஜெமீல்

Posted in

முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணும் நோக்குடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் தீர்க்க தரிசனத்துடன் மேற்கொள்ளும் தீர்மானங்களை விமர்சிப்பதற்கு ஆசாத் சாலிக்கு எந்த அருகதையும் கிடையாது என்று அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயரும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவருமான ஆசாத் சாலி முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பில் ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் விமர்சனங்களை கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
‘நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது கிழக்கின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எழுச்சி பெற்றிருப்பதன் காரணமாக கிழக்கில் நல்லாட்சி ஒன்றை அமைக்கும் கடிவாளம் முஸ்லிம் காங்கிரசின் கரங்களில் கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நிறுவுவது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கும் தூரநோக்குடனான தீர்மானம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறுகிய சிந்தனைகளுக்கு அப்பால் பரந்த மனப்பாங்குடன் நீண்ட கால அடிப்படையில் யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் போது கட்சியின் முன்னெடுப்புகள் யாவும் சிறப்பாக அமைந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்ட பல கனவுகளை நனவாக்கும் வகையில் இந்த சந்தர்ப்பத்தை எமது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று நான் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இனப்பிரச்சினை தீர்வொன்றின் போது கிழக்கில் முஸ்லிம் மாகாணம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வந்துள்ளார். ஆனால் இன்று இனப்பிரச்சினை தீர்வுக்கு அப்பால் முழுக் கிழக்கு மாகாணமும் ஒரு முஸ்லிம் மாகாணமாக பரிணமிக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் ஆசனத்தில் அமர்த்தியிருப்பதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இந்த சாதனையை நிலை நாட்டி இருக்கிறது. ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது ஆளும் தரப்பில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் முஸ்லிம் முதலமைச்சர் என்பது அதாவுல்லாஇ றிசாத் பதியுதீன் போன்றோரின் வெறும் கோஷங்களுடன் புஷ்வானமாகி போன வரலாற்றை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்போது இந்த மாற்றுத் தலைமைகள் நிபந்தனைகள் எதுவுமின்றி சமூகத்திற்கு துரோகமிழைத்து விட்டு அரசுக்கு முற்றாக சோரம் போன சோக நிகழ்வானது ஒரு கறை படிந்த வரலாறாகும்.
இம்முறை கூட எமது முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் கடிவாளத்தை கையில் எடுத்திருக்கா விட்டால் இந்த மாற்றுத் தலைமைகள் அதே வரலாற்றுத் துரோகத்தை இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்திருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.
ஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற விடயத்தில் விடாப்பிடியாக நின்று அதனை வெற்றி கொண்டிருகிறார். அத்துடன் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் அரசிடம் தீர்வு கோரி அவற்றுக்கான உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நீண்ட கால அபிலாஷைகள் தொடர்பில் அரசுடன் எழுத்து மூலமான ஒப்பந்தமொன்றையும் செய்து கொண்டே அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எமது தலைமைத்துவம் உடன்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூக நிர்வாக விடயங்கள் குறித்த அதிகாரங்கள் தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டு அவற்றை குறுகிய காலத்தினுள் அமுல் நடத்துவதற்கான உத்தரவாதங்களும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
ஆனால் யதார்த்தங்கள் – சாத்தியப்பாடுகள் குறித்து சற்றும் சிந்திக்காமல் முதலமைச்சர் பதவி ஒன்றுக்காக மட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைய வேண்டும் என்பதே ஆசாத் சாலி எழுப்பும் கோஷமாகும். ஆனால் அரசுடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு தாம் விரும்பிய ஒரு முஸ்லிமை நியமித்துக் கொண்டு இரண்டு பலம் பொருந்திய மாகாண அமைச்சுகளை பெறும் வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாண சபை அமைச்சரவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும்.
இவற்றை விட கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாமல் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் ஒட்டு மொத்தமான இருப்பு, பாதுகாப்பு என்பவற்றுக்கான உத்தரவாதங்களும், அவர்களது கல்வி, கலாசார, சமய, அரசியல், சமூக, பொருளாதார, பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நிவாரணங்களும், மத்திய அரசின் தயவின்றி பெற முடியாத யதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
எனினும் ஆசாத் சாலி இவற்றை எல்லாம் கருத்திற் கொள்ளாமல் எழுந்தமானமாக – ஒரு பக்க சார்பாக நின்று கட்சியையும் தலைமைத்துவத்தையும் கண்மூடித்தனமாக விமர்சித்திருப்பதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். உண்மையில் கட்சியில் எந்தவொரு அதிகாரபூர்வமான அந்தஸ்த்தையும் வகிக்காத நண்பர் ஆசாத் சாலிக்கு முஸ்லிம் காங்கிரசையோ தலைமைத்துவத்தையோ விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையோ தார்மீக உரிமையோ கிடையாது.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களோ உயர்பீட உறுப்பினர்களோ அடிமட்ட போராளிகளோ தலைமைத்துவம் மீது கிஞ்சித்தும் சந்தேகம் கொள்ளாத நிலையில் எமது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வந்த நண்பர் ஆசாத் சாலி வீண் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் புரளிகளையும் கிளப்பி விட்டு கட்சிக்கெதிரான சக்திகளுக்கு தீனி போட முற்பட்டிருப்பதானது அவர் ஏதோ ஒரு சக்தியின் முகவராக செயற்படுகிறார் என்பதையே புலப்படுத்துகிறது. அந்த சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவரது கருத்துகள் வெளிப்படுகின்றன என்றே நாம் உணர்கின்றோம்.
எவ்வாறாயினும் கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு இவ்வாறு ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டு எமது கட்சிக்கு எதிராக சதி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி நபர்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம். அது எத்தகைய பெரும் சக்தியின் சதியாக இருந்த போதிலும் அதனை முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சியை தொடர்ந்தும் வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதற்கு போராளிகள் என்றும் தயாராகவே இருக்கின்றனர் என்பதை ஆசாத் சாலிக்கும் அவரை இயக்குகின்ற சக்திகளுக்கும் இளைஞர் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் ஆணித் தரமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments: