Follow me on Twitter RSS FEED

சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்க மறுப்பு

Posted in
இலங்கை அரசாங்கத்தின் படிப்பினைகள் மற்றும் இணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியம் அளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை சர்வதேச மனித உரிமைக் குழுக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு குழு மற்றும் சர்வதேச நெருக்கடிக் குழு ஆகியவை நிராகரித்துள்ளன.
இந்த ஆணைக்குழு சுயாதீனம் மற்றும் பக்கசார்பற்ற விசாரணை போன்ற விடயங்களில் சர்வதேச தரத்தில் இல்லை என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன.
அதனாலேயே தாம் அந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க முடியாது என்று அவை மூன்றும் ஒரு கூட்டு அறிக்கையில் நிராகரித்துள்ளன.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து உள்ளூரில் விசாரித்து அதற்கு உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கவும், அங்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவசியம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் ஒருவர், ஆனால், இந்த ஆணைக்குழு அதற்கு தேவையான விடயங்களை சரியாகக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இலங்கைப் போரில், அதிலும் குறிப்பாக அதன் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய இரு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனித நேய மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்கள் குறித்து தமக்கு பல நம்பிக்கையான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ள மன்னிப்புச் சபை, இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணைகள், அதிகாரங்கள் போன்றவை, ஒட்டுமொத்தக் கொலைகள், சித்திரவதைகள் மற்றும் சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவை உள்ளடங்கிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது.
இலங்கையில் நடந்த போரின் நடந்திருக்கக்கூடிய மீறல்கள் போன்றவற்றை ஆராய்ந்து, இலங்கையில் தேசிய மட்டத்தில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கு ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று பல சர்வதேச அமைப்புக்கள் கோரி வந்தன. ஆனால் அவற்றை நிராகரித்த இலங்கை அரசாங்கம் இவை குறித்து வெளிநாட்டு விசாரணைகளுக்கு அனுமதியளிக்கப்படாது என்று கூறியதுடன், தாமே அவை குறித்து விசாரிப்போம் என்று கூறி இந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவை அமைத்தது.
அதேவேளை இலங்கை போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுவையும் இலங்கை நிராகரித்திருந்தது.
இருந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக தனது விசாரணைகளை நடத்தி வருகின்றது. பல உள்நாட்டுத்தரப்பினரும் இந்த விசாரணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்து வருகின்றனர்.
இலங்கை இராணுவமும் அவற்றுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் ஆயுதக்குழுக்களும் தமது உறவினர்களை கடத்திச் சென்றதாகவும், கொலை செய்ததாகவும் கூட பலர் அங்கு முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையிலேயே இந்த ஆணைக்குழுவால் சாட்சியமளிக்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்த மூன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மறுத்திருக்கின்றன.
இந்த ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை குறித்து இத்தகைய சர்வதேச அமைப்புக்கள் பல தடவைகள் முன்னரேயே விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கின்ற போதிலும், அந்த விசாரணையை அவை நிராகரித்திருப்பது உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் தற்போது ஒரு முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

0 comments: