Posted in
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்கவிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் இருவர் அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து சரத் ஃபொன்சேகாவின் மேன்முறையீடு தொடர்பான விசாரணைகள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளன.
சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த முதலாவது இராணுவ நீதிமன்றம் செல்லுபடியாகாது என்று அறிவிக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோதே இந்த இரு நீதிபதிகளும் விசாரணைகளில் இருந்து விலகியுள்ளனர்.
சொந்த காரணங்களை முன்னிட்டு தான் இந்த விசாரணைகளில் கலந்துகொள்ள முடியாது என்று கூறி நீதிபதி டீ. எஸ். சி. லெகம்வசம் என்பவர் விலகினார்.
நீதிமன்றத்தின் தலைவரான நீதிபதி சத்யா ஹெட்டிகே மீது சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவரும் விசாரணையில் இருந்து விலகிக்கொண்டுள்ளார்.