Follow me on Twitter RSS FEED

தமிழர் இரண்டாம் தரப் பிரஜைகளே: நிரூபிக்கிறது யாழ். நூலகச் சம்பவம்: சுரேஸ் பா.உ. விசனம்

Posted in
 யாழ். நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த, நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகள்தான் என்பதனை அரசாஙகம் நிரூபித்து விட்டது. எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் யாழ் நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்களச் சுற்றுலாப் பயணிகள் அறிவித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கிருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளிவிட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன்றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்யலாம். யாரும் ஏன் எதற்கு என்று எதனையும் கேட்க முடியாது. தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத்தரப்பு பாதுகாப்புத் தரவேண்டுமென்ற எண்ணத்திலேயே. இவர்கள் இன்று உள்ளனர். விரும்பத்தகாத குறிப்பிட்ட சம்பவத்தை ஆராயும்போது கூட இதுவே புலப்படுகிறது.
யாழ் நூலகமென்பது கற்றலுக்கானதொரு இடம். அங்கு செல்பவர்கள் அமைதியான முறையில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். அங்கு ஒரு நிகழ்வு நடக்குமானால் அதனைக் குழப்புவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. ஜனாதிபதி அலுவலகத்திலிருந்தோ அல்லது வெள்ளை மாளிகையிலிருந்தோ எவரும் வரமுடியும். ஆனால், நாட்டின் சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியானதே. ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகிறேன் என்னை உள்ளே அனுமதியுங்கள் என்று ஒருவர் கேட்டால் அவரை உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. ஆனால், அவருக்கு அடிபணிந்து இராணுவம் பொலிஸாரும் செயற்படுவது கண்டித்தக்க விடயம்.
அநுராதபுரத்துக்கும் பொலநறுவைக்கும் தமிழர்களும் முஸ்லிம்களும் சென்று இவ்வாறு நடந்து கொள்ள முடியுமா? அவ்வாறு நடந்து கொண்டால் நிலை என்னவாகும்? இங்குள்ள காணிகளில் நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தோம் என்று கூறினால் அது கிடைக்குமா, இதனை அரசாங்கம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
யாழ். ரயில்வே நிலையத்தில் சுமார் 150 சிங்கள மக்கள் தங்கியுள்ளனர். தாம் இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் இங்கு வாழ்ந்ததாக இவர்கள் கூறுகின்றனர். இருந்திருக்கலாம்.
நாம் இல்லையென்று மறுக்கவில்லை. இப்போது அவர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கொழும்பிலிருந்து அமைச்சர் வந்து அவர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார். கொழும்பிலிருந்து அவர்களுக்குச் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால், இருபது முப்பது வருடங்களாகத் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் பல்லாயிரக்கணக்கான தமிழ்மகக்ள் இன்னும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். அவர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு இந்த நாட்டில் அமைச்சர்களும் இல்லை. அதிகாரிகளும் இல்லை.
இதேபோன்று கிழக்கு மாகாணத்தின் தூர், சம்பூர் போன்ற பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்ட மக்கள் இன்னும் அகதி முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களையாவது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் அக்கறை இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
ஆனால், பெரும்பான்மைச் சமூகத்துக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஒன்றுக்குப் பத்து மடங்கான உதவிகளும் ஒத்தாசைகளும் பாதுகாப்புகளும் வழங்கப்படுகின்றன.
ஆனால், தமிழ் மக்கள் என்றால் அவர்கள் விரும்பத்தகாதவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் நோக்கப்படுகின்றனர். பயறுத்தி அவர்களை அடக்கும் முயற்சிகளே இடம் பெறுகின்றன.
வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் செய்யும் சிங்கள மக்கள் இந்த மனோபாவத்தைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி இவர்கள் விரும்பத்தகாத நடவடிக்கைளில் ஈடுபட்டால் அவர்கள் தண்டிக்கப்பட்டவேண்டும். இதனை விட்டு விட்டு அவர்களைப் பாதுகாப்பதும் கௌரவிப்பதும் ஓர் அநாகரிகமான செயல்.
இதேவேளை, அரசாங்கம் கூறும் இன நல்லிணக்கம் என்பது கிட்டவே நெருங்கி வர முடியாத ஒன்று என்பதும் இந்தச் சம்பவங்கள் மூலம் தெட்டத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்

0 comments: