Follow me on Twitter RSS FEED

பொன்சேகாவை விடுவிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு

Posted in
சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிப்பது ஜனாதிபதியின் பொறுப்பு என வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார். கண்டி தலதாமாளிகையில் இன்று இடம்பெற்ற அதிஷ்டானப் பூஜையில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுக்க உதவிய சரத் பொன்சேகாவை விடுவிப்பதன் மூலம் ஜனாதிபதிக்கு தற்போதுள்ள கீர்த்தி மேன்மையடையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளது. இது குறித்து பாராளுமன்றத் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றியை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் சீர்திருத்தத்தின் படி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோயுள்ளதென பாராளுமன்றச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றிலும் விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. சரத் பொன்சேகா தொடர்பில் பாராளுமன்றச் செயலாளர் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம் செல்லுபடியற்றதென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சபையில் இன்றுத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த பதில் சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ன பாராளுமன்றச் செயலாளரின் கடிதம் அரசியல் யாப்புக்கு உட்பட்டதென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தவறானதென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எமக்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பிரதான செயலாளர் விஜித ஹேரத், இந்தத் தீர்மானம் குறித்து தமது சட்டத்தரணிகளூடாக பாராளுமன்ற செயலாளருக்கும், தேர்தல்கள் செயலகத்திற்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் அதற்கு ஜனநாயகக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் நிப்புனாராச்சி நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றில் உறுப்பினர் ஒருவருடைய பதவி வெற்றிடமாகும் பட்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியிலிருந்து அவர் போட்டியிட்ட மாவட்டத்தில் அடுத்த நிலை விருப்பு வாக்குப் பெற்றவரைக் கொண்டு அந்த வெற்றிடம் நிரப்பப்படும்.
இதன்படி சரத் பொன்சேகா போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சரத் பொன்சேகா மற்றும் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் பாராளுமன்றிற்குத் தெரிவாகினர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக லக்ஷ்மன் நிப்புனாராச்சி 32 ஆயிரத்து 852 வாக்குகளைப் பெற்றுள்ளார். தேர்தல் சட்டத்தின் படி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற வெற்றிடத்தை, அவரைக் கொண்டே நிரப்ப முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

0 comments: