Follow me on Twitter RSS FEED

வெள்ளைக்கொடி விவகாரம். தாம் நிரபராதி என்கிறார் பொன்சேகா

Posted in
ஒக்டோபர் 04, 2010  வெள்ளைக்கொடி தொடர்பாகத் தம்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளிலும் தாம் நிரபராதியென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காகச் சிறைச்சாலையிலிருந்து சரத் பொன்சேகா அழைத்து வரப்பட்டபோது புதுக்கடைப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றும் இடம்பெற்றது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் கூடிய சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் அகல் விளக்குகளை ஏற்றிப் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
இவ்வேளையில் அனோமா பொன்சேகாவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் அருகிலுள்ள அரசமரத்தடியில் ஒன்றுகூடி சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
சமய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அண்மித்தபோது சரத் பொன்சேகாவை ஏற்றிய சிறைச்சாலை வாகனம் அவ்விடத்தை வந்தடைந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கூடியிருந்த பெரும் எண்ணிக்கையானோர் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கோஷம் எழுப்பினர்.
சுமார் 30 நிமிடங்களாக நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததுடன் பொன்சேகாவை ஏற்றிவந்த வாகனத்தையும் நிறுத்த நேரிட்டது.
பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிசார் அவ்விடத்திற்கு வந்து சிறைச்சாலை வாகனம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தனர்.
வாகனத்தின் பின்னால் ஆர்ப்பாட்டக்காரர்களும் வாகனத்தைத் தொடர்ந்து சென்றனர்.
பின்னர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையில் டபிள்யூ என். பி. பீ. வராவெவ மற்றும் எம். இஸட். ரசீம் ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது  தாம் நிரபராதியென சரத் பொன்சேகா தெரிவித்ததன் பின்னர் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாயின.
பிரதி சொலிசிட்டர் நாயகம் வசந்த பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் சாட்சியம் அளித்த ஊடகவியலாளர் பிரெட்றிகா ஜான்ஸ், தம்முடனான நேர்காணலின்போது சரத் பொன்சேகா வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த நேர்காணலின்போது பிரெட்றிகா ஜான்ஸ்  பயன்படுத்திய குறிப்புப் புத்தகத்தை புலனாய்வுத் திணைக்களத்தினர் கைப்பற்றியதுடன் அது தற்போது நீதிமன்றத்தின் வசம் இருப்பதாக பிரதி சொலிசிட்டர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை ஏனைய சந்தேகநபர்களுடன் சரத் பொன்சேகாவை அழைத்து வருவது அவரின் உயிருக்கு அச்சுறுத்தலானதென பொன்சேகா சார்பில் ஆஜாராகியிருந்த சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி சுட்டிக்காட்டினார்.
அந்தச் சந்தேக நபர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்களும்  இருக்கலாமென்பதால் பொன்சேகாவைத் தனியான வாகனமொன்றில் அழைத்து வருமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதுடன் சரத் பொன்சேகாவைத் தனியான வாகனமொன்றில் அழைத்துவருமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நாளை மறுதினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

0 comments: