Follow me on Twitter RSS FEED

ஜே.வி.பி.யினர் மாணவர்களை போராளிகளாக மாற்ற முயலுகின்றனர்

Posted in
வாக்குப் பலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்றுமே சாத்தியமில்லை என்று உணர்ந்து கொண்டுள்ள ஜே.வி.பி.யினர், வன்முறை மூலம் அதனை நிறைவேற்ற முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதற்காக பல்கலைக்கழக மாணவர்களை ஜே.வி.பி.யினர் பயன்படுத்துவதாகவும் இது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து மேலும் கருத்து கூறியுள்ள அவர், எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் உயர் கல்வியை சீர்குலைத்து, அவர்களை மீண்டும் 1971ம் ஆண்டிலும், 1987-88-89 ஆம் ஆண்டுகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதம் தாங்கிய வன்முறை போராளிகளாக மாற்றி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஜே.வி.பி.யினர், இப்போது தீவிரமாக மேற்கொண்டுவரும் முயற்சிகளை, அரசாங்கம் மட்டுமன்றி, பொதுமக்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர், எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். 

கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண்மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறுவழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவிகளையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கிறார்கள். 

ஜே.வி.பி.யினரின் இந்த தீய எண்ணத்தை புரிந்துக் கொண்டுள்ள நாட்டு மக்கள், குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் இப்போது ஜே.வி.பிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்னும் மூன்று மாதங்களில் பல்கலைக்கழகங்களில் வன்முறைகளுக்கு தூப மிட்டுவரும் ஜே.வி.பி.யின் கைப்பொம்மைகளாக இருந்து வரும் ஒருசில மாணவத் தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்தார். 

இதுவரை காலமும் பல்கலைக்கழக மாணவர்களே வன்முறைகளை சட்டத்தின் காவலர்களான பொலிஸார் மீதும், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மீதும் கட்டவிழ்த்து விட்டு பல்கலைக்கழகங்களை செயலிழக்கச் செய்து வந்தார்கள். 

ஆனால், இன்று இவர்களின் தான் தோன்றித் தனமான சட்டவிரோத செயற்பாடுகளை இனிமேலும் மெளனமாக இருந்து சகித்துக் கொள்ள முடியாத நிலையில் பொதுமக்களும் வன்முறையில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன்முறைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். 

இந்தியாவின் இடதுசாரி அமைப்புக்களை போன்று, இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பினர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தனக்கென செல்வாக்கு தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதனை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஊடாக பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று, உயர் கல்வி அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள 15 பிரதான பல்கலைக்கழகங்களில், ஆறு பல்கலைக்கழகங்களில் இன்று மாணவர் மத்தியில் அமைதியின்மையை ஜே.வி.பி.யினர் பின்னணியில் இருந்து தோற்றுவித்துள்ளனர். உபவேந்தர்கள் தாக்கப்படுகின்றனர். மாணவர்கள் தங்களுக்கிடையில் சண்டை போட்டு, இரத்தம் சிந்துகின்றனர். பரீட்சைகளை நடத்த முடியாத அளவிற்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன. பல்கலைக் கழகங்களின் சொத்துக்களும் உடமைகளும் பல்கலைக்கழக மாணவர்களினால் நாசமாக்கப்படுகின்றன. 

ஆகவே, ஜே.வி.பி.யினரும் வன்முறைகளில் ஈடுபடும் அக்கட்சியை ஆதரிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழகங்களில் வன்முறைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது நிச்சயம் அவர்களுக்குப் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments: