Follow me on Twitter RSS FEED

சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து செல்கிறது

Posted in
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் உள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுதேச வைத்தியதுறை, சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மியானி நிகர் சிறுவர் இல்லத்தில் ​நேற்றுக் காலை கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபையின் நீர்வழங்கல், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை மாகாணசபை உறுப்பனர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள பணிப்பாளர் இசான் விஜயதிலக, யுனிசெப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அஸ்துல் ரகுமான் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கிழக்கு மாகாணத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சுபைர், 

ஓவ்வாவொரு வருடமும் சுமார் 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு சிறுவர்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணங்களில் 78 அனாதைச் சிறுவர் இல்லங்கள் இருக்கின்றன அவற்றினையும் நாம் பராமரித்து வருகின்றோம். அதேபோன்று 78 பராமரிப்பு நிலையங்களும் உள்ளன அவற்றினையும் கிழக்கு மாகாண சபையூடாக பராமரித்து வருகின்றோம். 

இதேபோன்று கிழக்கு மகாணத்தில் உள்ள சிறுவர்களை அவர்களின் மேல் மேற்கொள்ளப்பட்டுவரும் துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்து அவர்களை சமூகத்தில் ஒரு சிறந்த பிரஜைகளாக மாற்றுவதற்கான பாரிய பொறுப்பு எம்மிடம் இருக்கின்றது. அதனாலே தான் நாங்கள் மிகவும் இறுக்கமாக இந்த சிறுவர் நன்னடத்தை பிரிவை நடாத்திவருகின்றோம். 

ஆனாலும் எமது கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது. குறிப்பாக எமது கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுவருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த இடத்திலே சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஒழுங்கு செய்துள்ளோம். 

அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெற்றுவருவதாக பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சிறுவர்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் துஸ்பிரயோகங்களை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. சிறுவர்களே நாளைய தலைவர்கள் அவர்களை சிறந்த முறையில் சமூகத்தில் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். 

இன்று எமது பகுதிகளில் பதிவுசெய்யப்படாமல் இயங்கும் சில சிறுவர் இல்லங்கள் சிறுவர்களை அடக்குமுறைக்குள் வைத்துள்ளதாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான சிறுவர் இல்லங்களை இனம்கண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளோம். 

இவ்வாறு பதிவுசெய்யாத சிறுவர் இல்லங்கள் தங்களது இல்லங்களை பதிவுசெய்து கொள்ளவேண்டும் என்றார்.

0 comments: